புத்தகக்
கண்காட்சிக்குச் சென்றுவந்த நிகழ்வு
1.
உங்கள் பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த
நிகழ்வைக் குறிப்புகளைக் கொண்டு
கட்டுரையாக்குக
குறிப்புகள்:
முன்னுரை- புத்தகக் கண்காட்சி- நடைபெற்ற இடம்- அரங்குகள் அமைப்பு- முறை- சிற்றரங்கம்- அறிந்து கொண்ட நூல்கள் -நடைபெற்ற
சிறப்பு நிகழ்வுகள்- புத்தக கண்காட்சியின் பயன்கள்- முடிவுரை
முன்னுரை :
“நூல் என்பது அறிவின் தீபம்”
என்று கூறுவர். மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கும் சிறந்த
தோழன் புத்தகம் ஆகும். அத்தகைய புத்தகங்களை ஒரே இடத்தில் காணவும், தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கும் நிகழ்ச்சி புத்தகக் கண்காட்சி. சமீபத்தில்
எங்கள் பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று வந்த அனுபவம்
மறக்கமுடியாததாக அமைந்தது.
புத்தகக் கண்காட்சி :
புத்தக வாசிப்பை
ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டு தங்களின் சிறந்த நூல்களை
வெளியிடுகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்
அறிவுத் திருவிழா இதுவாகும்.
நடைபெற்ற இடம் :
எங்கள் திருத்தணி நகரத்தின் மத்தியப் பகுதியில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து
வசதியும், பரந்த நிறுத்துமிட வசதியும் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடிந்தது.
அரங்குகள் அமைப்பு முறை :
கண்காட்சியில் நூற்றுக்கும்
மேற்பட்ட அரங்குகள் ஒழுங்காக வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு,
இலக்கியம், குழந்தைகள் நூல்கள், போட்டித் தேர்வு வழிகாட்டி நூல்கள் என பிரிவுகளாக அமைத்திருந்தனர்.
ஒவ்வொரு அரங்கிலும் புத்தகங்கள் தலைப்பின்படி சீராக அடுக்கப்பட்டிருந்தது.
சிற்றரங்கம் :
முக்கிய அரங்குகளுக்கு
அடுத்தபடியாக சிற்றரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு புதிய எழுத்தாளர்களின்
நூல்கள், சிறுவர் கதைகள், கவிதைத்
தொகுப்புகள், உள்ளூர் வரலாற்று நூல்கள் போன்றவை
வைக்கப்பட்டிருந்தன. வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும்
இருந்தது.
அறிந்து கொண்ட நூல்கள் :
நான் பல பயனுள்ள நூல்களை
அறிந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் இலக்கிய நூல்கள், வாழ்க்கை
வரலாறு நூல்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த
புத்தகங்கள் என பலவற்றை பார்வையிட்டேன். மாணவர்களுக்கு உதவும் போட்டித் தேர்வு
நூல்களும் மிகுந்த பயன் அளிப்பதாக இருந்தது.
நடைபெற்ற சிறப்பு
நிகழ்வுகள் :
கண்காட்சி நாட்களில் பல
சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. எழுத்தாளர் சந்திப்பு, கவியரங்கம்,
சொற்பொழிவு, புத்தக வெளியீட்டு விழா, குழந்தைகளுக்கான கதைப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகள்
வாசிப்பு ஆர்வத்தை மேலும் தூண்டின.
புத்தகக் கண்காட்சியின்
பயன்கள் :
- · புத்தகக் கண்காட்சி பல நன்மைகளை அளிக்கிறது.
- · வாசிப்பு பழக்கம் வளர்கிறது.
- · புதிய நூல்கள் அறிமுகமாகின்றன.
- · மாணவர்களின் அறிவு விரிவடைகிறது.
- · எழுத்தாளர்கள் ஊக்கமடைகிறார்கள்.
- · சமுதாயத்தில் கல்வி விழிப்புணர்வு உயரும்.
முடிவுரை :
மொத்தத்தில் புத்தகக்
கண்காட்சி எனக்கு அறிவுப் பொக்கிஷமாக அமைந்தது. நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து
வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது. “நூல் வாசிப்போம் – அறிவு வளர்ப்போம்” என்ற எண்ணத்துடன் நான் கண்காட்சியில் இருந்து மகிழ்ச்சியுடன் திரும்பினேன்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி