உழவெனும் உன்னதம் - கட்டுரை
முன்னுரை-உழவே தமிழர் பண்பாட்டு மகுடம்- உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்- சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்-முடிவுரை. கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
தலைப்பு
: உழவெனும் உன்னதம்
முன்னுரை:
”ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே”
என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உழவுத் தொழிலும் உழவர்களும்:
”நித்தமும் உழவே அவன் நினைப்பு
நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு”
உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல்
எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.
தமிழர் வாழ்வில் உழவு
”தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு
உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?”
பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக
வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி,
முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை,
தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான்.
மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும்
மகளிரும் ஈடுபட்டனர்.
இலக்கியங்களில் உழவுத் தொழில்:
”உழவர்கள் உழுத உழவினை நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்'
என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன
உழவின் சிறப்பு:
உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற
உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள்
மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே,
உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.'
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும்
வள்ளுவர் வழி இதனை அறியலாம்.
உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம்:
உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப்
போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.
முடிவுரை:
'சுழன்றும் ஏர்பின்னது உலகம்'
என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும்,
உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும்.
இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி