சுற்றுச்சூழல் பாதுகாப்பு - கட்டுரை

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு - கட்டுரை

    விசும்பின் துளியும் பசும்புல் தலையும்- காற்று மாசு -பசுமையைக் காப்போம்- மரம் நமக்கு வரம் - மழை நீர் உயிர் நீர்,   கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.

தலைப்பு:  இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

முன்னுரை:

              நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

                                                  விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

                                                    பசும்புல் தலைகாண் பரிது"

     என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

உங்கள் சுவாசத்தை நிறுத்தும் முன்

காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்

    மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

      சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

                                             உள்நின்று உடற்றும் பசி'

      ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

      இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை