பொதுக்கட்டுரைகள் - பத்தாம் வகுப்பு
10.ஆம் வகுப்பு – தமிழ் (வினா எண்:
45 அ மறும் ஆ)
1) குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும்
எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம்
சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
தலைப்பு
: சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை:
“தமிழே!
நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"
என்று கூறும் வண்ணம் பல செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.
தமிழைத்
”தாய்” எனக் கொண்ட புலவர்கள்:
”முந்தை மொழிகளில்
மூத்தவளே
என் மூளை நரம்பினை யாத்தவளே”
தமிழ்மொழியைத் தாயாகக் கருதி, அதனைப்
போற்றிப் பாடியவர்கள் சான்றோர். அவர்கள் தமிழின் இனிமையையும் செழுமையையும்
உணர்ந்து, தங்கள் படைப்புகளால் தமிழை அலங்கரித்தனர்.
தாய்க்கு பிள்ளை பேசுவது போல், அவர்கள் பிள்ளைத்தமிழ்
பாடல்கள் பாடி தமிழுக்கு அன்பு செலுத்தினர். தமிழின் மேன்மையைப் புகழ்ந்து பல்வேறு
இலக்கிய வடிவங்களில் படைப்புகளை வழங்கினர்.
பல்வேறு
இலக்கிய வடிவங்களின் தோற்றம்:
”குழவி மருங்கினும்
கிழவதாகும்” (பிள்ளைத்
தமிழ்”
” ஊரொடு
தோற்றமும் உரித்தென மொழிப" (உலா)
தமிழை வளர்க்கும் நோக்கில்
சான்றோர் பல இலக்கிய வடிவங்களை உருவாக்கினர். சதகம், பரணி, கலம்பகம்,
உலா, அந்தாதி, கோவை
போன்ற பல வகையான இலக்கியங்கள் தமிழில் தோன்றின. இவ்வாறான படைப்புகள் தமிழின்
செழுமையையும் கலைநயத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டின. இவை தமிழின் இலக்கியச்
செல்வத்தை அதிகரித்ததோடு, தமிழை உலகமெங்கும் புகழ்பெறச்
செய்தன.
தமிழின்
அழகை உயர்த்திய சான்றோர்:
சான்றோர் தமிழை அணியாகப் பூட்டி அழகூட்டினர்.
அவர்களின் கவிதைகளும் இலக்கியங்களும் தமிழின் இனிமையையும் ஆழத்தையும்
வெளிப்படுத்தின. தமிழை உயர்த்திப் போற்றும் இந்தப் புலவர்கள், தங்கள்
உள்ளம் மகிழ்ந்து தமிழுக்கு சேவை செய்தனர். அவர்கள் படைத்த இலக்கியங்கள் இன்றளவும்
தமிழரின் பெருமையாக விளங்குகின்றன.
முடிவுரை:
"வீறுடை
செம்மொழி தமிழ்மொழி"
என்ற பெருஞ்சித்திரனாரின்
கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர்
பலரால் பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும்
2) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில்
படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக குறிப்பு:நூல்
தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு-
சிறப்புக் கூறு- நூலாசிரியர்.
நூல்
மதிப்புரை
நூல் தலைப்பு: பொன்னியின்
செல்வன்
நூலாசிரியர்: கல்கி
கிருஷ்ணமூர்த்தி
முன்னுரை:
”தவிர்க்க முடியாத
தமிழ்ப்புதினம்”
தமிழ் இலக்கியத்தில்
வரலாற்று நாவல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றில் வாசகர்களை ஈர்க்கும் சிறந்த
படைப்பாக பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது. சோழர் கால வரலாற்றை அடிப்படையாகக்
கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல்,
தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நூலின் மையப்
பொருள்:
”வீரமும் அன்பும்
இப்புதினத்தின் உயிர்நாடி”
இந்த நாவலின் மையக் கருத்து
சோழர் கால அரசியல் நிகழ்வுகளையும்,
அருள்மொழி வர்மன் (பின்னர் ராஜராஜ சோழன்) அவர்களின் வாழ்க்கைச்
சம்பவங்களையும் சுற்றி அமைந்துள்ளது. நாட்டுப்பற்று, வீரத்
தன்மை, நட்பு, நம்பிக்கை போன்ற உயர்ந்த
பண்புகளை இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
மொழி நடை:
”இலக்கிய இன்பம்
பெருக்கெடுக்கும் சுவை”
இந்த நூலில் எளிமையானதும்
இனிமையானதும் ஆன தமிழ் நடை காணப்படுகிறது. உரையாடல்கள் தமிழ்ச்சுவைகளுடன்
அமைந்துள்ளதால், அவை வாசகர்கள் கதையில் ஈடுபடத் தூண்டுகின்றன.
வெளிப்படும் கருத்து:
நாட்டை நேசித்தல், நேர்மை,
தைரியம், அறிவு போன்ற நல்ல பண்புகளை வளர்க்க
வேண்டும் என்ற கருத்து இந்த நூல் மூலம் வெளிப்படுகிறது.
நூல் கட்டமைப்பு:
நூல் பல பகுதிகளாகவும்
அத்தியாயங்களாகவும் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த
அத்தியாயத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
சிறப்புக் கூறு:
·
வரலாற்று
உண்மைகளையும் கற்பனையையும் இணைத்து எழுதியிருப்பது இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பாகும்.
கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
·
இப்புதினத்தின்
கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவையாகவும், முக்கியத்துவம்
மிகுந்தவையாகவும் உள்ளன.
·
இப்புதினத்தைப்
படிப்பவர்களுக்கு,”
இப்புதினத்தில் நாமும் இடம்பெற்றுள்ளோம்” என்ற
உணர்வினை ஏற்படுத்துவது மிகச்சிறப்பு வாய்ந்தது.
முடிவுரை:
”கல்கி எனும்
சிற்பி செதுக்கிய அதிசய சிற்பம்”
மொத்தத்தில் பொன்னியின்
செல்வன் ஒரு சிறந்த வரலாற்று நாவல். இது வாசகர்களுக்கு வரலாற்றை அறியவும் நல்ல
பண்புகளை வளர்க்கவும் உதவுகிறது. பள்ளி மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு
சிறந்த தமிழ் நூலாக இது திகழ்கிறது.
3) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
கலைத்திருவிழாவிற்குச்
சென்று வந்த நிகழ்வு
முன்னுரை:
”கலைத்திருவிழா
என் மனதைக் கவர்ந்திழுத்தது”
குடும்பத்தினருடன் வெளியில் செல்வது
யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன்.
அறிவிப்பு:
மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச்
சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின்
வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள்
எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட
அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
அமைப்பு:
”அனைத்து கலைகளும்
சங்கமித்தது
என் மனமும் அங்கேயே
நிலையாய் நின்றது”
கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது. மேலும் அரங்குகளின் அமைப்பு கூட்ட நெரிசலை
சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
சிறு
அங்காடிகள்:
கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும்
பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது எங்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக
இருந்தது.
நிகழ்த்தப்பட்ட
கலைகள்:
”மனதைக் கவரும் மயிலாட்டம்
நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ”
எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது.
பேச்சரங்கம்:
கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். கலைத்திருவிழாவிற்கு
வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர்.
நானும் என் குடும்பத்தினரும் கூட பேச்சரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு
வந்தோம்.
முடிவுரை:
”ஆவலுடன் அங்கு
சென்றோம்
அங்கிருந்து வர மனமில்லாமல் வந்தோம்”
இறுதியாக எனக்குத் தேவையான சில
பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில்
வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில்
வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில்
ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக
இந்நிகழ்வு அமைந்தது.
4) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக:
முன்னுரை-
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்-
விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு
தருவோம்- முடிவுரை.
தலைப்பு
: சாலை பாதுகாப்பு
முன்னுரை:
”செய்யக் கூடாததைச்
செய்வதும் சட்டப்படி குற்றம்
செய்ய வேண்டியதைச்
செய்யாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம்”
சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம்
மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும்.
சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சாலை பாதுகாப்பு- உயிர்
பாதுகாப்பு:
சாலையில் விபத்துகள் நிகழாத
வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி
செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சாலை விதிகள்:
”சாலை விதிகள்
நமது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கே”
சாலையில் பயணம் செய்வோர் அனைவரும்
அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப்
பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க
நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட
இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில்
வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிகள்:
v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும்,
மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற
கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.
v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.
v வாகனஓட்டிகள் உடல்நிலை
மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது
அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை,
முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில்
ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.
முடிவுரை:
"சாலைவிதிகளை மதிப்போம்
விலைமதிப்பில்லாத உயிர்களைக்
காப்போம்"
என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை
விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.
5) உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர் அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில்
நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக.
தன்
வரலாறு கூறுதல் (அப்துல்
கலாம்)
முன்னுரை:
நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள்
இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன்.என்
வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை
அடைகிறேன்.
இளமைக்காலம்:
என்னுடைய பள்ளிப் படிப்பை
இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி மூலம்
தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தேன்.
பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி செய்து அதன் மூலம் கிடைத்த
வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப் பருவத்தில் கல்விச்
சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை ஆசிரியரிடம் கேட்டுத்
தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான் விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக
இருந்தது.
கல்லூரிப்படிப்பு:
1954 ம் ஆண்டு இயற்பியல்
பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு
சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தேன்.
விமான வடிவமைப்பு:
எம்.ஐ.டியில் படித்து முடித்த
பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின் உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த
பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.
பணி:
1983 ம் ஆண்டு இந்திய
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் பாதுகாப்பு
அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.
சாதனைகள்:
ü இந்தியாவில்
முதல்முறையாக 1974ஆம் ஆண்டு "சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச்
சோதனை நிகழ்ந்தது.அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி
பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது.
ü 1980ஆம்
ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற
ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தினேன்.
ü 1998 ஆம்
ஆண்டு "ஆபரேஷன் சக்தி" என்ற திட்டத்தின் மூலம் பொக்ரான் அணு வெடிப்புச்
சோதனையில் முக்கிய பங்காற்றினேன்..2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.
முடிவுரை:
நான் அறிவியல்மீது பற்று
கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று
கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல் திருக்குறள் ஆகும்.மாணவர்களே நாட்டின்
எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு நான் கூற
விரும்புவது, "கனவு காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள்,பின் செயலாற்ற முனையுங்கள்".
6. காற்று பேசியதைப்போல
, நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
நிலம்
பேசுகிறது
முன்னுரை :
”அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல்
தலை”
என்று வள்ளுவன்
என்னை பெருமைப்படுத்தி இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பல்வேறு வகைகளில்
மனிதர்கள் என்னை மாசுபடுத்துவது என்னை வருத்தம் அடையச் செய்கிறது.
வேறு பெயர்கள்:
நிலமாகிய எனக்கு
அசும்பு, காசினி, வட்டகை, கழனி, களர் கொல்லை, சுரம், தகர் ,நத்தம் என்று பலவகைப் பெயர்கள் உண்டு. எனது மாறுபட்ட தன்மைகளுக்கு ஏற்ப
நான் பெயரிட்டு அழைக்கப்படுகின்றேன்.
ஐவகை நிலங்கள்:
நில மகளாகிய எனக்கு
பழந்தமிழர் குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல், பாலை
என்று பெயரிட்டு, எனது தன்மைக்கு ஏற்ப என்னை ஐவகை நிலங்களாக
வகைப்படுத்தி இருக்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலோடு நான் இரண்டற கலந்து இருப்பது
எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இலக்கியங்களில் நான்:
v
"
நீலத் திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம் செய்யும்
குமரி எல்லை"
என்று மகாகவி கவிதையால் கொஞ்சியது என்னைத்தான்.
v " சிறு
பல் தொல்குடி பெறுநீர் சேர்ப்பன்" என்று அகநானூறு எனது வேறு
வடிவமாகிய கடல் பகுதியை குறித்தது. இவை போன்று இன்னும் நிறைய இலக்கியச் சான்றுகள் என்னைப்பற்றி இருப்பது
எனக்கு பெருமிதம் அளிக்கிறது.
எனது வருத்தம்:
v
நான்
மனிதர்களாகிய உங்களுக்கு மரம்,
செடி ,கொடி வளரவும் பயிர்கள் விளையவும்
வேளாண்மைக்கு உற்ற நண்பனாகவும் விளங்குகின்றேன்.
v
வற்றாத
ஆறுகளையும் குளங்களையும் ஏரிகளையும் தந்து மனிதர்களின் குடிநீர் தேவையை நிறைவு
செய்கிறேன்.
v
மேலும்
எண்ணிலடங்கா வளங்களை என்னுள் கொண்டிருக்கிறேன். அதை மனிதர்களாகிய நீங்களும்
மிகுதியாகப் பயன்படுத்துகிறீர்கள்.
v
ஆனால்
மனிதர்களாகிய நீங்களோ ரசாயன உரங்களை பயன்படுத்துதல், நெகிழிப்பைகளை மிகுதியாகப்
பயன்படுத்துதல், மேலும் ஆலைக் கழிவுகளை என்னுள் பாய்ச்சுதல்
என்று பல வகைகளில் என்னை மாசுபடுத்துவது என்னை ஆழ்ந்த துன்பத்திற்கு
உள்ளாக்குகிறது.
எனது வேண்டுகோள்:
v மனிதர்களின்
சுயநலத்திற்காக என்னை மாசுபடுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.
v நெகிழி பயன்பாட்டை
முற்றிலும் குறைத்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த துவங்குங்கள்
v மரங்களை வெட்டாமல் இன்னும்
அதிகமான மரங்களை நட்டு வளர்க்க முற்படுங்கள்.
v என்னிலிருந்து அதிக
கனிம வளங்களைத் தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள்.
முடிவுரை:
மனிதர்களே என்னுள்
இருக்கும் வளங்களை எடுத்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குவதாக எண்ணிக் கொண்டால், எதிர்காலச்
சந்ததியினருக்கு என்னால் கிடைக்கும் எந்த நன்மையையும் என்னால் தர இயலாமல்
போய்விடும். எனவே என்னை மாசுபடுத்தாமல் என்னை முறையாகப்
பயன்படுத்துங்கள் வருங்கால சந்ததியினர் நன்கு வாழ வழி செய்யுங்கள்!!
7. உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் - சிறப்புமிக்கவர் போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில்
நீங்கள்
கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைக் கட்டுரையாகத் தொகுத்து வழங்குக.
குறிப்பு:
பூ விற்பவர்,
சாலையோர உணவகம் நடத்துபவர், உழைப்பால்
உயர்ந்தவர்…
முன்னுரை:
”மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
மனித
சமுதாயத்தில் பெண்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றனர். குடும்பத்தையும்
சமுதாயத்தையும் முன்னேற்றும் சக்தியாக பெண்கள் திகழ்கின்றனர். குறிப்பாக கடின
உழைப்பின் மூலம் வாழ்க்கையை முன்னேற்றும் பெண்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக
விளங்குகின்றனர். நம் ஊரிலும் தங்கள் உழைப்பால் உயர்ந்து, போற்றத்தக்கவர்களாக
விளங்கும் பல பெண்கள் உள்ளனர்.
பூ
விற்பவர்:
”மணப்பது அவர் விற்கும் மலர்கள் மட்டுமல்ல
உழைப்பால்
அவரது உள்ளமும்தான்”
எங்கள்
ஊரில் வசிக்கும் முருகம்மாள் அவர்கள் அதிகாலை முதலே எழுந்து மலர்களை வாங்கி வந்து, மாலைகள்
கட்டி, விற்பனை செய்கிறார். மழை வந்தாலும் வெயில்
கொட்டினாலும் தன் தொழிலை விடாமல் தொடர்ந்து உழைக்கிறார். குடும்பத்தை நடத்தவும்
குழந்தைகளைப் படிக்க வைக்கவும் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
அவருடைய கடின உழைப்பும் பொறுமையும் அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
சாலையோர
உணவகம் நடத்துபவர்:
”சுவையான உணவால் மக்களின் வயிறும் நிறைகிறது
மக்களின் வாழ்த்துதலால் அவரின்
மனமும் நிறைகிறது”
மேலும்
எங்கள் ஊரில் சாரதா அவர்கள் சாலையோரத்தில்
சிறிய உணவகம் நடத்தி வருகிறார். அதிகாலை எழுந்து உணவு தயாரித்து மக்களுக்கு
விற்பனை செய்கிறார். சுவையான மற்றும் சுத்தமான உணவை வழங்குவதால் பலரும் அவருடைய
உணவகத்திற்கு வந்து உணவருந்துகின்றனர். தன்னம்பிக்கையுடனும் உழைப்புடனும்
குடும்பத்தை முன்னேற்றி வருவதால் அவர் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
உழைப்பால்
உயர்ந்தவர்:
எங்கள்
ஊரில் வாழும் முனியம்மாள் ஆரம்பத்தில் சிறிய வேலை செய்து வாழ்க்கையை தொடங்கினார்.
ஆனால் தன் கடின உழைப்பும் முயற்சியும் காரணமாக இன்று நல்ல நிலையை அடைந்துள்ளார்.
தன் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையச்
செய்துள்ளார். அவரது வாழ்க்கை பலருக்கும் ஊக்கமாக உள்ளது.
முடிவுரை:
”பெண்களே இந்நாட்டின் கண்கள்”
இந்த
பெண்கள் எல்லாம் தங்கள் கடின உழைப்பால் சமூகத்தில் சிறப்புமிக்கவர்களாக
விளங்குகின்றனர். அவர்களின் தன்னம்பிக்கை,
பொறுமை மற்றும் உழைப்பு அனைவருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. இத்தகைய
பெண்களை நாம் போற்றி மதிக்க வேண்டும். அவர்கள் சமூக முன்னேற்றத்தின் உண்மையான
வீராங்கனைகள் ஆவர்.
8. முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று - பொதுவாழ்வு - தூய்மை-
எளிமை -மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை . கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
தலைப்பு:
தமிழகத் தவப்புதல்வர்
முன்னுரை:
”வாழ்ந்தவர் கோடி!
மறைந்தவர் கோடி!
மக்கள் மனதில் நிலையாய்
நிற்பவர் யாரோ?”
படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு
பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர்
என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர்
பற்றிக் காண்போமா?
பிறப்பும் இளமையும்:
”விருதுப்பட்டிக்கு
இவரை விட பெரிய விருது தேவையா?”
விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட
விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15 -7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப்
பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும்
தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக்
கொண்டார்.
நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும்:
சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது,
பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.
தூய்மையும் எளிமையும்:
”எளிமையின் இலக்கணம்
– இவர்
மனதில் கொண்டது பெருங்குணம்”
பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்?
இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை
போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று
அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத
உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர்,
மக்கள் பணியே மகத்தான பணி:
1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல
தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி
நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து
எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.
முடிவுரை:
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல
வேண்டும்
இவன்போல யாரென்று ஊர் சொல்ல
வேண்டும்”
'கல்விக் கண் திறந்த காமராசர்
'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின்
துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத
நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.
9. விசும்பின் துளியும் பசும்புல் தலையும்- காற்று மாசு -பசுமையைக் காப்போம்-
மரம் நமக்கு வரம் - மழை நீர் உயிர் நீர்,
கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.
தலைப்பு:
இயற்கையைப் போற்று
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு)
முன்னுரை:
நமது சுற்றுச்சூழல்
உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும்
மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய
வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின்
தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விசும்பின் துளியும்
பசும்புல் தலையும்:
”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது"
என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது
இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது..
வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில்
பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப்
படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு:
”உங்கள் சுவாசத்தை
நிறுத்தும் முன்
காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்”
மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம்,
நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால்
தாவரங்கள், விலங்குகள், பறவைகள்
போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல
நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக்
குறைக்கலாம்.
பசுமையைக் காப்போம்:
”மரம் தான் மரம்
தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்”
சூரிய ஒளி, மழை, தாவரம்,
காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல்,
குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.
மரமும் மழையும் வரமும்
உயிரும்:
'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி'
ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம்
தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள்
அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப்
பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.
முடிவுரை:
இயற்கைவளங்கள் தொடர்ந்து
மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என
அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி.
மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.
10. முன்னுரை-உழவே
தமிழர் பண்பாட்டு மகுடம்- உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்- சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம்-முடிவுரை. கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.
தலைப்பு
: உழவெனும் உன்னதம்
முன்னுரை:
”ஏர் முனைக்கு
நேரிங்கே எதுவுமே இல்லே”
என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உழவுத்
தொழிலும் உழவர்களும்:
”நித்தமும் உழவே
அவன் நினைப்பு
நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு”
உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல்
எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.
தமிழர்
வாழ்வில் உழவு
”தமிழனின் உதிரத்தில்
கலந்தது உழவு
உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?”
பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக
வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி,
முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை,
தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான்.
மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும்
மகளிரும் ஈடுபட்டனர்.
இலக்கியங்களில்
உழவுத் தொழில்:
உழவர்கள் உழுத உழவினை,
”நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்'
என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன
உழவின்
சிறப்பு:
உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற
உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள்
மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே,
உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.
முடிவுரை:
'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார்
வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை
வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.
11) போதை இல்லாப் புது
உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை
போதை
இல்லாப் புது உலகைப் படைப்போம்
முன்னுரை
உலக நாகரிகம் வளர வளர மனித வாழ்க்கை
முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம் வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே
தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச் செல்கின்றது. அதில் முக்கியமான
ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து
சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. மது, போதைவஸ்து,
சிகரட் பாவனை போன்ற தீய பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரை உயர் வலிமை பெற்றுள்ளமை வேதனைக்குரியதாகும்.
போதைப் பொருட்கள் என்பவை
உடல், உளப் பாதிப்புக்களை
ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுமான
போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும் பொருட்கள் போதைப் பொருட்கள்
எனப்படும். உதாரணமாக
அபின், கஞ்சா, ஹெரோயின், சாராயம், சிகரட், பீடி,
சுருட்டு போன்றவற்றைக் கூறலாம்.
போதைப் பொருளும் சமுதாயமும்
சமுதாயத்தில் மாணவர்களும்,
படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள். இத்தகைய நல்ல
சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும்
சவாலாக உள்ளது. போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள் இரையாவதன் மூலம் அவர்கள்
எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக
மாறிவருகிறது.
போதைப் பாவனையால் ஏற்படும்
சமுதாய பிரச்சனைகள் போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல்,
பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை
எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை
துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வெளியிடங்களில்
அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை
செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
போதை என்னும் ஆயுதம்
ஒரு
தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட
ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும். போதை எனும் ஆயுதம் மனித வாழ்க்கையை
மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து,
பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது உயிரையும் காவு கொள்கின்றது.
எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து தமது உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து
தீய வழிகளில் செல்லாமலும் போதைப் பாவனை தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்
சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும்,
கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு
ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது.
சரியாக
உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை
குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல்
சோர்வு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
கல்லீரல்,
சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும்,
கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த
அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.
முடிவுரை
உலக
அளவில் போதைப் பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. போதைக்குள்
செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப்
பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்!
12. உங்கள் பகுதியில்
நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகளைக் கொண்டு
கட்டுரையாக்குக
குறிப்புகள்: முன்னுரை-
புத்தகக் கண்காட்சி- நடைபெற்ற இடம்- அரங்குகள் அமைப்பு- முறை- சிற்றரங்கம்- அறிந்து கொண்ட நூல்கள் -நடைபெற்ற
சிறப்பு நிகழ்வுகள்- புத்தக கண்காட்சியின் பயன்கள்- முடிவுரை
புத்தகக்
கண்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வு
முன்னுரை :
“நூல் என்பது அறிவின் தீபம்”
என்று கூறுவர். மனிதனின் அறிவையும் சிந்தனையையும் வளர்க்கும் சிறந்த
தோழன் புத்தகம் ஆகும். அத்தகைய புத்தகங்களை ஒரே இடத்தில் காணவும், தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கும் நிகழ்ச்சி புத்தகக் கண்காட்சி. சமீபத்தில்
எங்கள் பகுதியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்று வந்த அனுபவம்
மறக்கமுடியாததாக அமைந்தது.
புத்தகக் கண்காட்சி :
புத்தக வாசிப்பை
ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டு தங்களின் சிறந்த நூல்களை
வெளியிடுகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்கும்
அறிவுத் திருவிழா இதுவாகும்.
நடைபெற்ற இடம் :
எங்கள் திருத்தணி நகரத்தின்
மத்தியப் பகுதியில் இக்கண்காட்சி
நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதியும், பரந்த நிறுத்துமிட
வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல
முடிந்தது.
அரங்குகள் அமைப்பு முறை :
கண்காட்சியில் நூற்றுக்கும்
மேற்பட்ட அரங்குகள் ஒழுங்காக வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு,
இலக்கியம், குழந்தைகள் நூல்கள், போட்டித் தேர்வு வழிகாட்டி நூல்கள் என பிரிவுகளாக அமைத்திருந்தனர்.
ஒவ்வொரு அரங்கிலும் புத்தகங்கள் தலைப்பின்படி சீராக அடுக்கப்பட்டிருந்தது.
சிற்றரங்கம் :
முக்கிய அரங்குகளுக்கு
அடுத்தபடியாக சிற்றரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு புதிய எழுத்தாளர்களின்
நூல்கள், சிறுவர் கதைகள், கவிதைத்
தொகுப்புகள், உள்ளூர் வரலாற்று நூல்கள் போன்றவை
வைக்கப்பட்டிருந்தன. வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும்
இருந்தது.
அறிந்து கொண்ட நூல்கள் :
நான் பல பயனுள்ள நூல்களை
அறிந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் இலக்கிய நூல்கள், வாழ்க்கை
வரலாறு நூல்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த
புத்தகங்கள் என பலவற்றை பார்வையிட்டேன். மாணவர்களுக்கு உதவும் போட்டித் தேர்வு
நூல்களும் மிகுந்த பயன் அளிப்பதாக இருந்தது.
நடைபெற்ற சிறப்பு
நிகழ்வுகள் :
கண்காட்சி நாட்களில் பல
சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. எழுத்தாளர் சந்திப்பு, கவியரங்கம்,
சொற்பொழிவு, புத்தக வெளியீட்டு விழா, குழந்தைகளுக்கான கதைப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகள்
வாசிப்பு ஆர்வத்தை மேலும் தூண்டின.
புத்தகக் கண்காட்சியின்
பயன்கள் :
·
புத்தகக்
கண்காட்சி பல நன்மைகளை அளிக்கிறது.
·
வாசிப்பு
பழக்கம் வளர்கிறது.
·
புதிய
நூல்கள் அறிமுகமாகின்றன.
·
மாணவர்களின்
அறிவு விரிவடைகிறது.
·
எழுத்தாளர்கள்
ஊக்கமடைகிறார்கள்.
·
சமுதாயத்தில்
கல்வி விழிப்புணர்வு உயரும்.
முடிவுரை :
மொத்தத்தில் புத்தகக்
கண்காட்சி எனக்கு அறிவுப் பொக்கிஷமாக அமைந்தது. நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து
வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது. “நூல் வாசிப்போம் – அறிவு வளர்ப்போம்” என்ற எண்ணத்துடன் நான் கண்காட்சியில் இருந்து மகிழ்ச்சியுடன்
திரும்பினேன்.
13.
நெகிழியின் தீமை குறித்து கட்டுரை எழுதுக
நெகிழிப்பை
ஒழிப்போம் – இயற்கையை காப்போம்
முன்னுரை:
”நெகிழி சுற்றுச்சூழலின்
எதிரி”
இன்றைய நவீன வாழ்க்கையில்
நெகிழி (Plastic) மனித வாழ்வின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. எளிதில்
கிடைக்கும் தன்மை மற்றும் குறைந்த செலவு காரணமாக நெகிழிப் பொருட்கள் அதிகமாக
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நெகிழி பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பெரும்
அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
நெகிழியின் தீமைகள்:
”நெகிழி மனித
குலத்திற்குக் கேடு”
நெகிழி எளிதில் அழியாத தன்மை
கொண்டது. இதனால் நிலம், நீர், காற்று
ஆகியவை மாசடைகின்றன. நீர்நிலைகளில் வீசப்படும் நெகிழிப் பொருட்கள் நீர்வாழ்
உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணில் கலக்கும் நெகிழி, நில வளத்தை குறைக்கிறது. மேலும் நெகிழியை எரிப்பதால் விஷ வாயுக்கள்
வெளியேறி மனித உடல்நலத்தையும் பாதிக்கின்றன.
தடுக்கும் முறைகள்:
நெகிழிப் பயன்பாட்டை
குறைப்பதே சிறந்த தீர்வாகும். துணிப்பைகள், காகிதப் பைகள்,
இயற்கைச் சிதைவடையும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒருமுறை
பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நெகிழி கழிவுகளை சரியாக
சேகரித்து மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் முன்னெடுக்க
வேண்டியவை:
ஒவ்வொரு குடிமகனும் நெகிழி
ஒழிப்பில் பங்கு பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் சமூக
அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு விதிகளை
கடைபிடித்து, நெகிழி பயன்பாட்டைத் தடுக்க உறுதுணையாக இருக்க
வேண்டும். வீட்டிலிருந்து தொடங்கி நெகிழி இல்லா வாழ்க்கை முறையை பின்பற்ற
வேண்டும்.
முடிவுரை:
”ஒழிப்போம்
! ஒழிப்போம்! நெகிழியை ஒழிப்போம்!
காப்போம் ! காப்போம்!
தலைமுறை காப்போம்!
நெகிழியை முற்றிலும்
ஒழிப்பது கடினமாக இருந்தாலும், அதன் பயன்பாட்டை
கட்டுப்படுத்துவது நம்மால் முடியும். இன்று நாம் எடுக்கும் சிறிய முயற்சிகள் நாளைய
தலைமுறைக்கு தூய்மையான சுற்றுச்சூழலை வழங்கும். ஆகவே, “நெகிழிப்பை
தவிர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற
உறுதியை அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.
14.
பொங்கல் திருநாள்(தமிழர் திருநாள்) என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
பொங்கல்
திருநாள்
முன்னுரை:
வாழி ஆதன்,
வாழி அவினி!
நெல் பல பொலிக!
பொன் பெரிது சிறக்க!
தமிழர்களின் வாழ்வியல்,
பண்பாடு, இயற்கைநேயம் ஆகியவற்றை
வெளிப்படுத்தும் முக்கியமான திருநாள் பொங்கல் ஆகும். உழவுத்தொழிலின் மகத்துவத்தை
உணர்த்தும் இத்திருநாள் தமிழர்களின் தனித்துவமான அடையாளமாக விளங்குகிறது. ஆண்டு
தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல் மகிழ்ச்சி, ஒற்றுமை,
நன்றி உணர்வு ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்துகிறது.
தமிழர்
திருநாள்:
பொங்கல் தமிழர்களின்
தேசியத் திருநாளாகக் கருதப்படுகிறது. இயற்கை தந்த விளைச்சலுக்காக சூரியனுக்கு
நன்றி செலுத்தும் நாளாக இது அமைந்துள்ளது. குடும்பத்தினர் ஒன்றிணைந்து புதிய அரிசி,
பால், வெல்லம் கொண்டு பொங்கல் சமைத்து
மகிழ்வது இத்திருநாளின் முக்கிய அம்சமாகும்.
விழாவின் சிறப்பு:
பொங்கல் விழா நான்கு
நாட்கள் கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்தல், கோலம்
போடுதல், புதிய ஆடைகள் அணிதல், உறவினர்களுடன்
மகிழ்ச்சியைப் பகிர்தல் போன்றவை விழாவின் சிறப்புகளாகும். இயற்கையோடு இணைந்து
வாழும் தமிழர் பண்பாட்டை இந்த விழா வெளிப்படுத்துகிறது.
மாட்டுப்
பொங்கல்:
உழவுக்குத் துணைபுரியும்
மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளை குளிப்பாட்டி
அலங்கரித்து, பூஜை செய்து உணவு அளிப்பது வழக்கமாகும்.
விவசாயத்தில் மாடுகளின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறும் நாளாக இது
அமைந்துள்ளது.
காணும்
பொங்கல்:
”விளைக வயலே!
வருக இரவலர்”
காணும் பொங்கல் அன்று
மக்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழ்கிறார்கள். பூங்கா, ஆற்றங்கரை போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிப்பதும், ஒற்றுமையை வலுப்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும்.
சமத்துவ
பொங்கல்:
சமத்துவ பொங்கல் சமூக
ஒற்றுமையை வலியுறுத்தும் நாளாகும். சாதி, மதம், ஏழை–பணக்காரர் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரும்
ஒன்றாக பொங்கல் கொண்டாடுவது இதன் சிறப்பாகும். இது மனிதநேயமும் சமத்துவமும் வளர
உதவுகிறது.
முடிவுரை:
பொங்கல் திருநாள்
தமிழர்களின் பண்பாடு, உழைப்பின் மதிப்பு, இயற்கைநேயம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை உணர்த்தும்
மகத்தான விழாவாகும். இவ்விழாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதை தலைமுறைதோறும் பேணிப் பாதுகாப்பதே நமது கடமையாகும்.
15. நூலகம் குறித்துக்
கட்டுரை எழுதுக
நூலகம்
முன்னுரை
”என்னைத் தலைகுனிந்து படித்தால்
உன்னத் தலைநிமிரச் செய்வேன்” - புத்தகம்
நூலகம் என்று கூறியவுடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணர்வு தோன்றும்.
நூலகங்களில் புத்தகங்கள் வரிசையாகவும் ஓர் ஒழுங்கான முறையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி, அங்கு நிலவும் அமைதி, பல்வேறுத் துறைச்சார்ந்த புத்தகங்கள் தோற்றம் முதலியன நம்மை பரவசப்படுத்தும். அத்தகைய நூலகங்கள் பற்றி காண்போம்!
பண்டைக்காலத்தில் நூலகத்தின் நிலை
பண்டைகாலத்தில்
மக்கள் தம் எண்ணங்களையும் கருத்துகளையும் கற்பாறைகள், களிமண்பலகைகள், மரப்பட்டைகள், தோல்கள், பனையோலைகள் முதலியவற்றில் எழுதி வந்தனர். தாங்கள் அறிமுகப்படுத்திய பின்பும்கூட பண்டைகாலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மக்களிடையே நூல்களின் பயன்பாடு குறைவாக இருந்தது.
நூலகத்தின் தோற்றம்
”படைப்பாற்றலின் பெருக்கம் நூலகத்தின் தொடக்கம்”
கற்றவர்கள் புதிது புதிதாக நூலகளைப் படைத்ததனால் இலக்கியங்களும் இலக்கணங்களும் தோன்றி,
மக்களீன் வாழ்க்கை நெறியை செம்மைப்படுத்தின. மக்களின் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு துறைசார்ந்த நூல்கள் எழுதப்பட்டு அவை அனைத்தையும் தொகுத்து நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
நூலகத்தின் பல்வேறு பெயர்கள்
புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகச்சாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் முதலியன நூலகத்தின் பல்வேறு பெயர்களாகும்.
நூலகத்தின் பயன்கள்
நூலகங்கள் இலக்கியம்,
இலக்கணம், தத்துவம், கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம் முதலிய அனைத்துத் துறைச்சார்ந்த அறிவையும் நமக்குத் தருகிறது.
நூலகத்தைப் பயன்படுத்தும் முறை
”அமைதியான மனமும் ஆழ்ந்த அறிவும்”
நாம் நூலகத்தில் அமைதிக் காக்கவேண்டும். எடுக்கும் நூல்களையோ செய்தித்தாள்களையோ எடுக்கும் இடத்திலேயே வைக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ மடிக்கவோ கூடாது. அதில் எதையும் எழுதவும் கூடாது. உறுப்பினர் ஆனபிறகு உறுப்பினர் அட்டையைக் கொடுத்து நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதை உரிய நேரத்தில் ஒப்படைத்து தேவைப்படும் வேறு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொது நூலகத்துறை
ஓர் அரசின் தலையாய கடமை தம்நாட்டில் வாழும் மக்களை அறிவுடையவர்களாக ஆக்குவதே. அதை நோக்கமாகக் கொண்டே ஊர்தோறும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாநில மைய நூலகங்கள், மாவட்ட நூலகங்கள்,
வட்டார நூலகங்கள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
2010 ஆம் ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த நினைவைப் போற்றும் வகையில் சென்னைக் கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் பெரியதோர் நூலகம் கட்டப்பட்டது. இதில் 11.5 இலட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இங்கு குளுகுளு வசதியுடன் கூடிய கணினி நூலகமும் உள்ளது.
முடிவுரை
’ஆறில்லா ஊருக்கு
அழகுபாழ்’
என்பதைப்போல நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழாகும். இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகங்களில் நாம் அமைதியைக் கடைபிடிப்பதோடு நூல்களைப் பயன்படுத்திச் சான்றோர் ஆவோம்!
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி