6.ஆம் வகுப்பு - தமிழ் மூன்றாம் பருவம் கட்டுரை & கடிதங்கள்

6.ஆம் வகுப்பு - தமிழ்

மூன்றாம் பருவம் - கட்டுரை & கடிதங்கள்

இயல்-1

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை:

            மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை:

      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,

       முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

         மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

தேசிய ஒருமைப்பாடு-சுதந்திரத்தின் அடித்தளம்:

        இன்று நாம் அனுபவிக்கும் சுதந்தரம் எளிதாகக் கிடைத்ததில்லை. ஒருமைப்பாட்டு உணர்வு என்னும் உரமிட்டு, கண்ணீரும் செந்நீரும் சிந்தி, எண்ணற்றோர் இன்னுயிர்த் தியாகம் செய்து சொல்ல முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கிப் பெற்றதாகும். இவ்வாறு பெற்ற விடுதலைக்கு அடித்தளமாக அமைந்தது தேசிய ஒருமைப்பாடே ஆகும்.

முடிவுரை

       நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!  உலக அரங்கில் உயர்வோம்!

இயல்-2

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

அறம் செய விரும்பு

முன்னுரை:

அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். வாரிக்கொடுத்த வள்ளல்கள் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அன்பும் அறனும் தான் வாழ்க்கையின் பண்பும் பயனும் என்றார் வள்ளுவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அல்லவா?

கடையேழு வள்ளல்கள்:

வேள்பாரி, ஆய் அண்டிரன், எழினி, கோப்பெருநள்ளி, மலையமான் திருமுடிக்காரி, பேகன், வல்வில் ஓரி என்ற வள்ளல்கள் கடையேழு வள்ளல்கள் ஆவர். இவர்களில் முல்லைக் கொடிக்குத் தேர் தந்த பாரியும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் மிகச்சிறந்தவர்கள்.

இல்லார்க்கு ஒன்று ஈவது அறம்:

கேட்டுக் கொடுப்பது யாசகம், கேட்காமல் கொடுப்பது உதவி, உதவி பெறுபவருக்கே கொடுப்பவர் யாரென்ற விளம்பரம் இன்றிக் கொடுப்பதே அறம். அறம் செய விரும்பு என்றார் ஔவைப்பாட்டி. ஆம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.

முடிவுரை:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

  புறத்த புகழும் இல              - என்கிறார் வள்ளுவர்.

அறச்செயல்களைச் செய்வதால் கிடைப்பதுதான் இன்பம். மற்றவற்றால் கிடைப்பது இன்பமும் இல்லை  புகழும் இல்லை. அறம் செய்வோம்! வாழ்க்கையை அழகாக்குவோம்!

இயல்-3

கடிதம் எழுதுக.

நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

அனுப்புநர்

   வா. வெண்மதி,

   மாணவர் செயலர்,

   அரசினர் உயர்நிலைப் பள்ளி,

   தணிகைப்போளூர்,

   இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

   தமிழ்நிலா பதிப்பகம்,

   4, வள்ளுவர் தெரு,

   மதுரை-2.

ஐயா,

   பொருள் : தமிழ்-தமிழ் அகராதிகள் அனுப்பக்கோருதல் தொடர்பா.

               வணக்கம். எங்கள் பள்ளி நூலகத்திற்காக தமிழ்-தமிழ் அகராதிகள் பத்துப் படிகள் தேவைப்படுகின்றன. எனவே மேற்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அகராதிகளை அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி ஐயா!!

இணைப்பு:

  1. வங்கியில் பணம் செலுத்தியதற்கான வரைவோலை நகல்.

                                                                                                                             இப்படிக்கு,

                                                                                                       தங்கள் பனிவுடைய

                                                                                                                 வா. வெண்மதி,

                                                                                                         (மாணவர் செயலர்).

இடம் : தணிகைப்போளூர்,

நாள் : 09-03-2023.


உறைமேல் முகவரி:

தமிழ்நிலா பதிப்பகம்,

4, வள்ளுவர் தெரு,

மதுரை-2.



 

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை