10 TH STD TAMIL KADITHAM EZUTHUTHAL

10.ஆம் வகுப்பு தமிழ்

                        கடிதம் எழுதுதல் - வினா விடைகள்

1. மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

காந்தி தெரு.

10.06.2025

அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,

          வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.

      தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

      இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு.

உன் அன்புள்ள நண்பன்,

.குறளரசன்.

2) மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

                                                           7, பெரிய தெரு,

                                                              மயிலை,

                                                             10-06-2025.

அன்புள்ள நண்பா,

      நலம். நலம் அறிய ஆவல்.மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழ்களில் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.மரங்களின் பயன்களையும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக்கூறி, இருக்கிறாய்.

     நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். உயிர்வளியைக் காசுகொடுத்து வாங்கும் நிலை வராதபடி,நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”,“மரங்களை அழிக்காதேஎன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆக்கச் செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றைச் சுவாசிப்போம்.

                                                                இப்படிக்கு

                                                               உன் அன்புத் தோழன்

                                                                 .சங்கர்

3. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

செ.தமிழரசன்.

4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்:

     .திருக்குமரன்,

     25 வள்ளல் தெரு,

     அரக்கோணம்-1

பெறுநர்:     

     உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

     உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

     அரக்கோணம்-1

மதிப்பிற்குரிய அய்யா,

     பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.

    வணக்கம். நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு அருகிலிருந்த குறிஞ்சி உணவுவிடுதியில் மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன். புலவுச்சோறு விலை ரூபாய் 120 எனப் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நானும்  புலவுச்சோறு சாப்பிட்டுவிட்டு, உணவுக்கான தொகையைக் காசாளரிடம் செலுத்தினால், அவர் புலவுச்சோறு விலை ரூபாய் 150 எனக் கூறினார். மேலும் பல விளக்கங்களைக் கொடுத்து ரூபாய் 150 வாங்கிக்கொண்டார்.

   மேலும், உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தேன்.  கண் விழித்து பார்த்தபோது  மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!

 

                                                              இப்படிக்கு

                                                         தங்கள் உண்மையுள்ள      

                                                             .திருக்குமரன்

 

இடம்:அரக்கோணம்,

நாள்:24-09-2020.

                                                                                                                                           

5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்` என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்:

    கா.தமிழ்மாறன்,

    16,பெரிய கடைத்தெரு,

    தஞ்சாவூர்.

பெறுநர்:

    ஆசிரியர் அவர்கள்,

    தமிழருவி நாளிதழ்,

    மதுரை -1.

 

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: பொங்கல் சிறப்பு மலரில் கட்டுரை வெளியிட வேண்டுதல் தொடர்பாக.

      வணக்கம்.தங்கள் நாளிதழின் சார்பாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளேன். அதைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் வெளி வர ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.                

நன்றி!!

                                                           இப்படிக்கு,

                                                        தங்கள் பணிவுடைய

                                                          கா.தமிழ்மாறன்.

இடம்: தஞ்சாவூர்

நாள் : 18-05-2025

6. பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த தையும் அதற்காகப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

                                                            8,சோழன்தெரு,

                                                              செங்குன்றம்.

                                                             22-06-2025.

அன்புள்ள மாமாவுக்கு,

     தமிழ்த்தென்றல் எழுதும் கடிதம். நான் இங்கு நலம். தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் நலம் அறிய ஆவல்.சென்ற வாரம் எங்களது பள்ளித் திடலில் பணப்பை ஒன்று கிடைத்தது. அதை என்னுடைய தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.அதைத் திறந்து பார்த்தபோது, தான் அதில் பெருந்தொகையான பணம் இருப்பது தெரிய வந்தது. அதை எனது தலைமையாசிரியர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு செய்தேன். அதற்காக என்னை எனது தலைமை ஆசிரியரும், என்னுடைய ஆசிரியர்களும் என்னைப் பாராட்டி,இறைவணக்கக் கூட்டத்தில்,சிறப்பு செய்தனர்.இந்த செய்தி, நாளிதழிலும் வெளி வந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. எனவே இச்செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                              இப்படிக்கு,

                                                          தங்கள் அன்புடைய,

                                                           பெ.தமிழ் தென்றல்.

 உறைமேல் முகவரி:

7. உங்கள் தெருவில்  பழுதடைந்துள்ள  மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     வா.நிறைமதி,

     23, வள்ளலார் சாலை,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

பெறுநர்:

     உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

     செயற்பொறியாளர் அலுவலகம்,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

மதிப்பிற்குரிய அய்யா

  பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் தொடர்பாக.

    வணக்கம்.வள்ளலார் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.  எங்கும் இருளாக உள்ளது.சாலையில் நடந்து செல்பவர்கள் பள்ளம்,மேடு தெரியாமல் இடறி விழுகின்றனர்.  இருளைப் பயன்படுத்தி, சில திருட்டுச் சம்பவங்களும் நிகழ்கின்றன. நகராட்சியில் பலமுறை எங்கள் இன்னல்களைக் கூறியும் விளக்குகள் மாற்றப்படவில்லை.

    எங்கள் தெருவில் பழுதடைந்துள்ள விளக்குகளை மாற்றித்தர ஆவன செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                       (தெரு மக்கள் சார்பாக)

                                                           வா.நிறைமதி

இடம்:பாரதிதாசன் நகர்.

நாள்:29-09-2020.

உறைமேல் முகவரி:

 பதிவிறக்கம் செய்ய

 

 



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை