1. முன்னுரை- தமிழகம் தந்த தவப்புதல்வர் - மொழிப்பற்று - பொதுவாழ்வு - தூய்மை-
எளிமை -மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை . கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
தலைப்பு:
தமிழகத் தவப்புதல்வர்
முன்னுரை:
”வாழ்ந்தவர் கோடி!
மறைந்தவர் கோடி!
மக்கள் மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?”
படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர்.
படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர்
என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர்
பற்றிக் காண்போமா?
பிறப்பும் இளமையும்:
”விருதுப்பட்டிக்கு
இவரை விட பெரிய விருது தேவையா?”
விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.
நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும்:
சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.
தூய்மையும் எளிமையும்:
”எளிமையின் இலக்கணம்
– இவர்
மனதில் கொண்டது பெருங்குணம்”
பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட
வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர்,
மக்கள் பணியே மகத்தான பணி:
1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல
தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி
நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து
எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.
முடிவுரை:
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவன்போல யாரென்று ஊர் சொல்ல
வேண்டும்”
'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற
தலைவர் இவரே.
2. விசும்பின் துளியும் பசும்புல் தலையும்- காற்று மாசு -பசுமையைக் காப்போம்-
மரம் நமக்கு வரம் - மழை நீர் உயிர் நீர், கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
தலைப்பு:
இயற்கையைப் போற்று
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு)
முன்னுரை:
நமது சுற்றுச்சூழல்
உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும்
மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய
வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின்
தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விசும்பின் துளியும்
பசும்புல் தலையும்:
”விசும்பின் துளிவீழின் அல்லால்
மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது"
என்கிறார் வள்ளுவர் .மாதம்
மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது..
வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில்
பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப்
படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு:
”உங்கள் சுவாசத்தை
நிறுத்தும் முன்
காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்”
மக்கள் தொகைப் பெருக்கம்,
மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு,
வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி,
காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.
பசுமையைக் காப்போம்:
”மரம் தான் மரம்
தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்”
சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று
இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.
மரமும் மழையும் வரமும்
உயிரும்:
'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி'
ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம்
தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள்
அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப்
பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.
முடிவுரை:
இயற்கைவளங்கள் தொடர்ந்து
மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என
அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி.
மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.
3. முன்னுரை-உழவே
தமிழர் பண்பாட்டு மகுடம்- உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்- சுழன்றும்
ஏர்ப்பின்னது உலகம்-முடிவுரை. கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.
தலைப்பு
: உழவெனும் உன்னதம்
முன்னுரை:
”ஏர் முனைக்கு
நேரிங்கே எதுவுமே இல்லே”
என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
உழவுத்
தொழிலும் உழவர்களும்:
”நித்தமும் உழவே
அவன் நினைப்பு
நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு”
உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை செய்தல்
எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.
தமிழர்
வாழ்வில் உழவு
”தமிழனின் உதிரத்தில்
கலந்தது உழவு
உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?”
பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக
வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி,
முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு சாமை,
தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான்.
மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும்
மகளிரும் ஈடுபட்டனர்.
இலக்கியங்களில்
உழவுத் தொழில்:
”உழவர்கள் உழுத உழவினை நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்'
என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன
உழவின்
சிறப்பு:
உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற
உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள்
மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே,
உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.'
உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும்
வள்ளுவர் வழி இதனை அறியலாம்.
உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்:
உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப்
போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.
முடிவுரை:
'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார்
வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை
வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.
4)
குமரிக்கடல் முனையையும், வேங்கட
மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,
தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம்
சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்
மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை வரைக.
தலைப்பு
: சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை:
“தமிழே!
நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!"
என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.
கன்னித்தமிழ்:
”முந்தை மொழிகளில்
மூத்தவளே
என் மூளை நரம்பினை யாத்தவளே”
தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் தொடங்கி,தற்கால உரைநடை மற்றும்
துளிப்பா வரை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இலக்கிய வடிவங்களில்,பல்வேறு பொருட்களைக் கொண்டு, எண்ணிலடங்கா நூல்களை
இயற்றி,தமிழன்னைக்குச் சூட்டி,தமிழ்
மொழியைக் கன்னித்தமிழாய் வைத்திருப்பதற்கு தமிழராகிய நாம் பெருமைப்பட வேண்டும்.
தமிழன்னைக்கு
எழில் சேர்க்கும் சிற்றிலக்கிய வடிவங்கள்:
தமிழகத்தில், நாயக்கர் ஆண்ட காலப்பகுதியை சிற்றிலக்கிய காலம் என்பர். ஏனெனில், அக்கால கட்டத்திலேயே சிற்றிலக்கிய வடிவங்கள் பல உருவாகி, நூல்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பிள்ளைத்தமிழ்,
சதகம், பரணி, கலம்பகம்,
உலா அந்தாதி, கோவை முதலான சிற்றிலக்கிய
வடிவங்கள் ஆகும்.
பிள்ளைத்தமிழ்:
குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர்
கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது.குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ் மற்றும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஒப்பற்ற பிள்ளைத்தமிழ்
இலக்கியங்கள் ஆகும்.
சதகம்:
நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும்.
பரணி:
"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி"
என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால் முற்பட்டதாகும்.
கலம்பகம்:
18 உறுப்புகளைக் கொண்டு,
அகம் புறம் என இரண்டும் கலந்து பாடுவது கலம்பகம் ஆகும். பல்வேறு பாவினங்கள்
கலந்துபாடுவது கலம்பகம்.கலம்பகம்என்பதில்,கலம் என்பது
பன்னிரண்டையும், பகம் என்பது ஆறையும் குறிக்கும்.
நந்திக்கலம்பகம் முதற் கலம்பகம் ஆகும்.
உலா:
” ஊரொடு
தோற்றமும் உரித்தென மொழிப"
இதனை தொல்காப்பியம் என்று குறிப்பிடப்படுகிறது.
மன்னர்கள் உலா வரும்போது ஏழு பருவ மகளிரும், அவரைக் கண்டு
அவர் மீது பற்று கொண்டு மயங்குவதாக பாடுவது உலா. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய
ஞானஉலா தமிழில் தோன்றிய முழுமை பெற்ற முதல் உலா நூலாகும்.
அந்தாதி:
அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர்,
அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில்
முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும்
யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி
முதல் அந்தாதி நூலாகும்.
கோவை:
பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும்.
முடிவுரை:
"வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும்.
மேற்கூறியவாறு, பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால்
பாங்காய் வளர்ந்தன. சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு
செயல்பட்டனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய
கடமையாகும்
5)
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
ஒன்றை எழுதி தலைப்பு தருக. முன்னுரை- தமிழன் அறிவியலின் முன்னோடி- விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்- விண்ணியல் அறிவில் நமது கடமை- முடிவுரை.
தலைப்பு:
விண்ணியல் அறிவு (விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்)
முன்னுரை:
”எங்களுக்கு நிலாச்சோறு
சாப்பிடவும் தெரியும்
நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும்
தெரியும்”
தமிழர் அறிவியலை நான்காம்
தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில்
நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ்
இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க
இயலாது.
தமிழன்
அறிவியலின் முன்னோடி:
தமிழர் பழங்காலத்தில்
தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும்,
பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன.
பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால
இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று.
“விசும்பில்
ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி"
எனத்தொடங்கும் பரிபாடலில்
புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய
அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924
ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால்
வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்:
”கைகளை நீட்டிப்பார்
ஆகாயம் உன்கைகளில்
முயற்சிகளைச் செய்துபார்
ஆகாயம் உன் காலடியில்”
விண்வெளிக்குப் பயணம் செய்த
முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில்
நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில்
மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.
1995 ஆம் ஆண்டு நாசா
விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி
ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த
விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.
நமது கடமை:
”அறிவியல் எனும்
வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகாலன் தன் பெருமையெல்லம்
கணினியுள்ளே பொருத்துங்கள்” - வைரமுத்து
அனைத்துக் கோள்களையும்
இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும்
ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான
ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை
உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப்
பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின்
முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்
முடிவுரை:
"வானை அளப்போம்,
கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி
ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி