10.ஆம் வகுப்பு - தமிழ் மங்கையராய்ப் பிறப்பதற்கே துணைப்பாடக்கட்டுரை

 

10.ஆம் வகுப்பு – தமிழ்

                                     விரிவானக்கட்டுரை- மங்கையராய்ப் பிறப்பதற்கே 


 

மங்கையராய்ப் பிறப்பதற்கே.."என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பெண் சாதனையாளர்கள் பற்றி குறிப்பு எழுதுக.

முன்னுரை:

    விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர். அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி:

     இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணிவிருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும் கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.

பாலசரசுவதி:

     இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும் நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.

இராஜம் கிருஷ்ணன்:

    சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும்  எழுதியுள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:

     காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.

மதுரை சின்னப்பிள்ளை:

    இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வைவிருதையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றவர்.

முடிவுரை:

      பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும் உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர் என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.

பதிவிறக்க

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை