10.ஆம் வகுப்பு தமிழ் கடிதம் எழுதுதல்

 10.ஆம் வகுப்பு தமிழ்

கடிதம் எழுதுதல்

10.ஆம் வகுப்பு தமிழ்

கடிதம் எழுதுதல் - வினா விடைகள் (5 மதிப்பெண் , வினா எண்: 39)

1. மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

காந்தி தெரு.

10.06.2025

அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,

          வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத் திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.

      தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

      இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு.

உன் அன்புள்ள நண்பன்,

2) மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

                                                           7, பெரிய தெரு,

                                                              மயிலை,

                                                             10-06-2025.

அன்புள்ள நண்பா,

      நலம். நலம் அறிய ஆவல்.மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழ்களில் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.மரங்களின் பயன்களையும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக்கூறி, இருக்கிறாய்.

     நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். உயிர்வளியைக் காசுகொடுத்து வாங்கும் நிலை வராதபடி,நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”,“மரங்களை அழிக்காதேஎன்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆக்கச் செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றைச் சுவாசிப்போம்.

                                                                இப்படிக்கு

                                                               உன் அன்புத் தோழன்

                                                                 .சங்கர

3. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

பொது நூலகத்துறை இயக்குநருக்குக் கடிதம்

பூம்பாறை.

10.07.2025

அனுப்புநர்

செ.தமிழரசன்,

50, அன்னை இல்லம்,

காந்தி தெரு,

பூம்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் - 625 001.

பெறுநர்       

பொது நூலக இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

சென்னை 600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் சார்பு.

வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

4. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்ததைக் குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்:

     .திருக்குமரன்,

     25 வள்ளல் தெரு,

     அரக்கோணம்-1

பெறுநர்:     

     உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

     உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

     அரக்கோணம்-1

மதிப்பிற்குரிய அய்யா,

     பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.

    வணக்கம். நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு அருகிலிருந்த குறிஞ்சி உணவுவிடுதியில் மதிய உணவு உண்பதற்காகச் சென்றேன். புலவுச்சோறு விலை ரூபாய் 120 எனப் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நானும்  புலவுச்சோறு சாப்பிட்டுவிட்டு, உணவுக்கான தொகையைக் காசாளரிடம் செலுத்தினால், அவர் புலவுச்சோறு விலை ரூபாய் 150 எனக் கூறினார். மேலும் பல விளக்கங்களைக் கொடுத்து ரூபாய் 150 வாங்கிக்கொண்டார்.

   மேலும், உணவு உண்ட சில மணி நேரங்களிலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தேன்.  கண் விழித்து பார்த்தபோது  மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியில் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!!

 

                                                              இப்படிக்கு

                                                         தங்கள் உண்மையுள்ள      

                                                             .திருக்குமரன்

 

இடம்:அரக்கோணம்,

நாள்:24-09-25

5. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்` என்ற உங்கள் குறுங்கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்:

    கா.தமிழ்மாறன்,

    16,பெரிய கடைத்தெரு,

    தஞ்சாவூர்.

பெறுநர்:

    ஆசிரியர் அவர்கள்,

    தமிழருவி நாளிதழ்,

    மதுரை -1.

 

மதிப்பிற்குரிய அய்யா,

  பொருள்: பொங்கல் சிறப்பு மலரில் கட்டுரை வெளியிட வேண்டுதல் தொடர்பாக.

      வணக்கம்.தங்கள் நாளிதழின் சார்பாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளேன். அதைத் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன். தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் வெளி வர ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.               

நன்றி!!

                                                           இப்படிக்கு,

                                                        தங்கள் பணிவுடைய

                                                          கா.தமிழ்மாறன்.

இடம்: தஞ்சாவூர்

நாள் : 18-05-2025

 

உறைமேல் முகவரி:


6. பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த தையும் அதற்காகப் பாராட்டு பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

உறவினருக்குக் கடிதம்

                                                            8,சோழன்தெரு,

                                                              செங்குன்றம்.

                                                             22-06-2025.

அன்புள்ள மாமாவுக்கு,

     தமிழ்த்தென்றல் எழுதும் கடிதம். நான் இங்கு நலம். தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் நலம் அறிய ஆவல்.சென்ற வாரம் எங்களது பள்ளித் திடலில் பணப்பை ஒன்று கிடைத்தது. அதை என்னுடைய தலைமை ஆசிரியரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.அதைத் திறந்து பார்த்தபோது, தான் அதில் பெருந்தொகையான பணம் இருப்பது தெரிய வந்தது. அதை எனது தலைமையாசிரியர் மூலம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு செய்தேன். அதற்காக என்னை எனது தலைமை ஆசிரியரும், என்னுடைய ஆசிரியர்களும் என்னைப் பாராட்டி,இறைவணக்கக் கூட்டத்தில்,சிறப்பு செய்தனர்.இந்த செய்தி, நாளிதழிலும் வெளி வந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்தது. எனவே இச்செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                              இப்படிக்கு,

                                                          தங்கள் அன்புடைய,

                                                           பெ.தமிழ் தென்றல்.

 உறைமேல் முகவரி:

7. உங்கள் தெருவில்  பழுதடைந்துள்ள  மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகளைப் பொருத்துமாறு மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்:

     வா.நிறைமதி,

     23, வள்ளலார் சாலை,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

பெறுநர்:

     உயர்திரு மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,

     செயற்பொறியாளர் அலுவலகம்,

     பாரதிதாசன் நகர்,

     காஞ்சிபுரம்-1.

மதிப்பிற்குரிய அய்யா

  பொருள்: தெருவிளக்குகள் பழுது நீக்குதல் தொடர்பாக.

    வணக்கம்.வள்ளலார் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன.  எங்கும் இருளாக உள்ளது.சாலையில் நடந்து செல்பவர்கள் பள்ளம்,மேடு தெரியாமல் இடறி விழுகின்றனர்.  இருளைப் பயன்படுத்தி, சில திருட்டுச் சம்பவங்களும் நிகழ்கின்றன. நகராட்சியில் பலமுறை எங்கள் இன்னல்களைக் கூறியும் விளக்குகள் மாற்றப்படவில்லை.

    எங்கள் தெருவில் பழுதடைந்துள்ள விளக்குகளை மாற்றித்தர ஆவன செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                       (தெரு மக்கள் சார்பாக)

                                                           வா.நிறைமதி

இடம்:பாரதிதாசன் நகர்.

நாள்:29-09-2020.

உறைமேல் முகவரி:

8. நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி, உங்கள் நண்பரையும் நூலினைப் படிக்குமாறு பரிந்துரைத்து நண்பருக்குக் கடிதம் எழுதுக.

எண்.10, வள்ளுவர் தெரு,

               மயிலாடுதுறை,

22-09-2025

அன்புள்ள நண்பன் தமிழ் மாறனுக்கு,

        இங்கு நான் எனது பெற்றோருடன் நலமாக இருக்கிறேன். அங்கு நீயும் உனது பெற்றோருடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.உலகப் பொதுமறை என்று அனைவராலும் போற்றப் படுகின்ற திருக்குறளைத் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் படித்து இருக்க வேண்டும். தினமும் ஓர் அதிகாரம் என்ற அளவில் நான் படித்து வருகிறேன். நீயும் அவ்வாறே படித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பொருள்களை உடையது.  7 சீர்களில் உலக நீதியைச் சொல்லும் திருக்குறளை நீ கண்டிப்பாகப் படிக்க வேண்டும். படிப்பதோடு மட்டுமல்லாமல், திருக்குறள் வழியில் நாம் பயணிக்க வேண்டும். திருக்குறளைப் படித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை எனக்கு எழுதுக.

                      இப்படிக்கு,

      உன் அன்பு நண்பன்

     முத்தழகன் 

9. புதிதாக திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு, திறன்பேசி பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்று எழுதுக.

                                                                                                                              15,எழில் வீதி,

                                                            காஞ்சி-1,

                                                           24-09-2025.

அன்புள்ள தங்கைக்கு,

      உன் அன்பு அண்ணன் எழுதும் கடிதம். நலம்,நலமறிய ஆவல் .நீ எவ்வாறு படிக்கிறாய்? உன்னுடைய கால்பந்து பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது?அன்றாடம் பயிற்சிக்குச் செல்கிறாயா? படிப்பையும் விளையாட்டையும் இருகண்களென நினைத்து,இரண்டிலும் கவனம் செலுத்துக.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா கூறினார்.திறன்பேசியினால் நன்மையும் உண்டு;தீமையும் உண்டு. படிப்பிற்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது,இலவசஇணைப்பு போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும் உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி,கல்வியில் உயர்நிலையை அடைய முயலவும். அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம்.

                                                            இப்படிக்கு

                                                        உன் அன்பு அண்ணன்

                                                           த.தமிழ்நிலவன்.


10. நீங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சியின் சிறப்புகளை விளக்கி நண்பனுக்குக் கடிதம் ஒன்று எழுதுக.


                                                             10, தமிழ் வீதி,

                                                           வள்ளுவன் நகர்,

                                                              காஞ்சி-1.

24-09-2025

அன்புள்ள நண்பா,                                                                        

         நலம் நலம் அறிய ஆவல். சென்ற வாரம் வேலூர் மாநகரில் அமைக்கப் பட்டிருந்த அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு நான்கண்ட கண்கொள்ளாக் கட்சிகளை உன்னிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது பெற்றோருடன் சென்றது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.அங்கே அரசின் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன அந்த அரங்குகளில், பல்வேறு துறைசார்ந்த செய்திகளும்,அத்துறையின் சாதனைகளும் விளக்கப்பட்டு இருந்தன.

   அதோடன்றி, பொருட்காட்சியில் தின்பண்டங்கள் விற்பதற்கென்று நிறைய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்களைக் கவரும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விற்கப்பட்டன. இளம் வயதினருக்குக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் பயனுள்ளதாகவும் பொருட்காட்சி அமைந்திருந்தது. நீயும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை பொருட்காட்சிக்குச் சென்று,உனது அனுபவங்களை எனக்குக்கடிதமாக எழுதி அனுப்பவேண்டும்.

                                                              இப்படிக்கு,

உன் உயிர் நண்பன்

     .கனியமுதன்.

உறைமேல் முகவரி:

11. புதிதாக இருசக்கர ஊர்தி வாங்கி, ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள உறவினருக்கு முக்கியச் சாலை விதிகளை விளக்கி, அவற்றைக் கடைபிடிக்க வலியுறுத்திக் கடிதம் ஒன்று எழுதுக.

6, சோலை நகர்,

                                                             கோவில்பட்டி.

                                                             29-09-2025.

அன்புள்ள அண்ணனுக்கு,

           தம்பி எழுதும் மடல். வணக்கம். தாங்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்று எங்கள் பள்ளியில் கடந்த வாரம் நடந்தது. அக்கூட்டத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்துக் கூறினார்கள்.அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இக்கடிதத்தில் அவற்றை எழுதியுள்ளேன்.

·        தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டக் கூடாது.

·        சாலையின் வகைகள், மைல்கற்கள் விவரங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

·        போக்குவரத்தினை முறைப்படுத்தும் குறியீடுகளுக்கும், போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

·        நடைமேடை நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும்,சாலையைக் கடப்பவர்களையும், அச்சுறுத்தக் கூடாது.

     மேற்கண்ட விதிகளைக் கடைப்பிடித்தால் விபத்துகள் நடைபெறாமல் காத்துக்கொள்ள முடியும். தங்கள் பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

                                                          என்றும் அன்புடன்,

                                                           .கமலக்கண்ணன்.

 உறைமேல் முகவரி:

13. உங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவிற்கு, நிகழ்கலை வல்லுநர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்துக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

     மா.செந்தமிழ்ச்செல்வி,

     அரசினர் உயர்நிலைப்பள்ளி,

     வள்ளுவன் தமிழ் இலக்கிய மன்றம்,

     சேலம்-1.

பெறுநர்

     திரு. காளியப்பன் அவர்கள்,

     தெருக்கூத்துக் கலைஞர்,

     15, மூன்றாவது குறுக்குத் தெரு,

     காமராஜர் நகர்,

     மதுரை-9.

பெருந்தகையீர்,

       வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளியில் விடுதலை நாள் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம்.நிகழ்கலையின் பெருமைகளை உணர்ந்து,நிகழ்கலைக் கலைஞர்களைப் போற்றும் வண்ணம் ஒவ்வோர்ஆண்டும்,ஒவ்வொரு வகையான நிகழ்கலையை நடத்துகின்றோம்.இந்த ஆண்டு தெருக்கூத்தை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளோம்.தங்கள் மிகச்சிறந்ததெருக்கூத்து கலைஞர் என்பதையும்,இக்கலையை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காகப் பலமுயற்சிகளைஎடுத்து வருவதையும் செய்தித்தாள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

      எனவே இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று வள்ளுவன் தமிழிலக்கியமன்றத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். என்னுடைய அழைப்பை ஏற்று நீங்கள் நிச்சயம் விடுதலை நாள் விழாவிற்கு வருகை புரிவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!!

                                                            இப்படிக்கு,

                                                         தங்கள் பணிவுடைய

                                                        மா.செந்தமிழ் செல்வி.

இடம்: சேலம்

நாள்: 12-05-2025

 உறைமேல் முகவரி:

14. பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்  குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதைச் செயல்படுத்தத் தலைமை  ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்:

     நா.கொற்றவன்,

     மாணவர் தலைவர்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     தணிகைப் போளூர்,

     இராணிப்பேட்டை மாவட்டம்.

பெறுநர்

     உயர்திரு. தலைமையாசிரியர் அவர்கள்,

     அரசு உயர்நிலைப்பள்ளி,

     தணிகை போளூர்,

     இராணிப்பேட்டை மாவட்டம்.

பெருமதிப்பிற்குரிய ஐயா,

  பொருள்: பள்ளி தூய்மைச் செயல்திட்டம் உருவாக்கம் தொடர்பாக.

         வணக்கம் பள்ளியை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாகச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.திட்டத்தின் செயல்பாடுகளாவன:

·        பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்

·        பள்ளி வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

·        பள்ளி குடிநீர்த்தொட்டியை,குளோரின் கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.

·        வகுப்பறைகள் ஆய்வகங்கள் நூலகம் ஆகியவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும்.

·        பள்ளிக் கட்டடங்களை பழுதுபார்த்து வெள்ளை அடிக்க வேண்டும்.

·        மாணவர்களிடையே சுத்தம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்துதல்.

      இத்திட்டங்களை மாணவர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து நிறைவேற்றுவதற்குத் தாங்களும், ஆசிரியர்களும் அனுமதி அளிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                          இப்படிக்கு,

                                                  தங்கள் உண்மையுள்ள மாணவன்,

                                                          நா.கொற்றவன்

 உறைமேல் முகவரி:

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை