OCTOBER MONTH CHILDRENS FILM KURANGKUPEDAL

 OCTOBER MONTH CHILDRENS FILM 

KURANGKUPEDAL

    ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையை ஒட்டியிருக்கும் கத்தேரி கிராமத்தில் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட, மாரியப்பன் எனும் சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிவு செய்கிறான். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யும் அவர்களின் கேங்கில், வசதி படைத்த வீட்டைச் சேர்ந்த நீதி மாணிக்கம் புது சைக்கிள் வாங்கிவிடுகிறான். இந்நிலையில் மாரியப்பனுக்கும் நீதி மாணிக்கத்துக்கும் சண்டை வர, யார் முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள், அதில் மாரியப்பன் சந்திக்கும் சவால்கள் என்ன, அவனுக்கும் அவனது தந்தைக்குமான உறவு எப்படியிருந்தது போன்ற கேள்விகளுக்குக் கிராமத்துப் பின்னணியில் நகைச்சுவை கலந்து பதில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.

       ஜிப்ரான் வைபோதாவின் துள்ளலான இசையில் “கொண்டாட்டம் விட்ட லீவ வச்சு திங்கப் போறோம்” என்ற பாடல் முன்முனுக்க வைக்கிறது. அதேபோல படத்தின் பின்னணி இசையும் பீல் குட் உணர்வைக் கடத்தி நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் சுமி பாஸ்கரன் உயரமான மலைத் தொடர்கள், ஆறு என ரம்மியமான காட்சிகளில் அழகான ஒளியுணர்வை செட் செய்தவர், சைக்கிள் ரேஸ்ஸில் ஒற்றையடிப் பாதையைப் பின்தொடரும் விதத்தில் கேமரா ஆங்கிள்களை பரபரவென பயன்படுத்தியிருக்கிறார். டிரோன் ஷாட்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தொகுப்பாளர் சிவானந்தேஸ்வரன் தடம் மாறிப் பயணிக்கும் இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் கத்திரி போட்டிருக்கலாம். சினிமா போஸ்டர்கள், 80ஸ் ரசிகர் மன்ற பேனர்கள், சினிமா கொட்டகை எனக் கலை இயக்கத்தில் சுமி பாஸ்கரனின் உழைப்பு தனியாகத் தெரிகிறது.

     யதார்த்தமான மனிதர்கள், மிகையில்லா வசனங்கள், முதலில் யார் சைக்கிள் ஓட்ட போகிறார்கள் என்கிற சச்சரவு ஆகியவை திரைக்கதையை மித வேகத்தில் அழகாக பெடல் போட வைக்கிறது. ஓர் இடத்தில் அந்த சச்சரவு தீர்ந்த பின்னர், அடுத்துக் கதை எங்கே பயணிக்கப் போகிறது ஆவல் கூடுகிறது. ஆனால் அதைப் பூர்த்தி செய்யத் தவறிய இரண்டாம் பாதியின் திரைக்கதை குரங்கு பெடல் போட்டு எங்கெங்கோ பாதை மாறி நம்மையும் படத்தோடு ஒன்றவிடாமல் செய்கிறது.




கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை